புகைபிடிப்பதை ஊக்குவித்தமை தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் மற்றும் பொலிஸாரிடம் கோரப்பட்டுள்ளது.
அமைச்சர் வீரவன்ச, அண்மையில் ஆயுர்வேதக் கூறுகளுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இலவங்கப்பட்டை அடிப்படையிலான சிகரெட்டை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், வீரவன்சவால் ஊக்குவிக்கப்பட்ட இலவங்கப்பட்டை அடிப்படையிலான சிகரெட் வகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய ஆணையகம் (National Authority on Tobacco and Alcohol) எச்சரித்திருந்தது.
சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்திடம் ஒப்புதல் பெறாமல், சிகரெட்டைச் சந்தைக்குக் கொண்டுவருவது சட்டத்தை மீறும் செயலென குறித்த ஆணையகத்தின் சட்டத் தலைவர் விராஜ் பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலவங்கப்பட்டை அடிப்படையிலான சிகரெட்டுக்கு அனுமதி வழங்கவில்லை என ஆயுர்வேத திணைக்களமும் சுகாதார அமைச்சும் புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய ஆணையகத்துக்கு அறிவித்துள்ளன.
இந்நிலையில், புகைபிடிப்பதை ஊக்குவிப்பதற்காக அமைச்சர் விமல் வீரவன்ச மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.