மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறன் வகுப்பறை(ஸ்மாட் வகுப்பறை) மற்றும் திறன் பலகை(Smart board) திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் இராஜதுரை பாஸ்கர் தலைமையில் கல்லூரியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஸ்மாட் வகுப்பறையை நாடாவெட்டி திறந்து வைத்ததுடன் ஸ்மாட் டிஜிட்டல் வோட்டை மங்கள விளக்கேற்றி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதற்கு ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த வலயக்கல்வி பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் ”எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு புதிய கல்வி சீர்திருத்தம் இடம்பெறவுள்ளது.கல்விச்சீர்திருத்தின் பங்காளிகளாக தற்போது வலயக்கல்வி பணிப்பாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள்.இரண்டாம் கட்டமாக அதிபர்கள்,ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட இருக்கின்றார்கள்.
இதன்மூலம் கல்வியில் புதிய விடயங்களையும்,ஆலோசனைகளையும் முன்னெடுத்து சென்று அங்கு கல்விச்சீர்திருத்தற்கு நாமும் பங்காளியாக மாறமுடியும்.இதனால் கல்வியின் வளர்ச்சி உயர்த்தப்படும்.
இன்று இக்கல்லூரியானது நம்பிக்கைகுரிய பாடசாலையாக திகழ்கின்றது.இங்குள்ள பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பழைய மாணவர் சங்கம் ஒன்றிணைந்து பாடசாலையை வளர்ச்சியடைவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் காத்திரமாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வேலைத்திட்டத்தை சிறப்பாக செய்து முடித்த பழைய மாணவர் சங்கம்,பாடசாலை அபிவிருத்தி சங்கம் போன்றோருக்கு நான் பாராட்டுகளையும்,நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றேன்.
இக்கல்லூரியை தரிசிப்பவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகளை மாணவர்களுக்கு வழங்கமுடியும்.
இன்று ஸ்மாட் வகுப்பறை(திறன் வகுப்பறை)மற்றும் ஸ்மாட் பலகை(திறன் பலகை) கல்லூரியில் புதிதாக அமைத்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனால் மாணவர்களின் கற்றல் வளர்ச்சியை மென்மேலும் மேம்படையச் செய்வதும் ஆசிரியர்களின் கடமை நிமித்தமாகும்” எனத் தெரிவித்தார்.