“தேர்தல் காலத்தில் நாமே ஆளும் தரப்பில் உள்ளோம், எம்மால் தான் மக்களுக்கு பணியாற்ற முடியும் என்றார்கள். ஆனால், இரண்டு வருடங்கள் கடந்தும், ஒரு செங்கல் கல் கூட கண்டி மாவட்ட அபிவிருத்திக்காக வைக்கப்படவில்லை.” என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவருமான வேலு குமார் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பஹத்த ஹேவாஹெட காரியாலய திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“கண்டி மாவட்டத்திற்கு பல வருடங்களுக்கு பின் 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்தது. அதனை மிக சிறந்த முறையில் கடந்த ஆட்சியில் நாம் பயன்படுத்தினோம். கண்டி மாவட்டத்தில் பல ஆண்டுகள் தேங்கி கிடந்த உரிமை சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்தோம். அதே போன்று, புறக்கணிக்கப்பட்டிருந்த தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியில் எழுச்சியை ஏற்படுத்தினோம்.
கடந்த தேர்தல் காலத்தில் நாமே ஆளும் தரப்பில் உள்ளோம், எம்மால் தான் மக்களுக்கு பணியாற்ற முடியும் என்றார்கள். ஆனால் இரண்டு வருடங்கள் கடந்தும் ஒரு செங்கற்கல் கூட கண்டி மாவட்ட அபிவிருத்திக்காக வைக்கப்பட வில்லை.
கடந்த ஆட்சி காலத்தில் வீடமைப்பிற்கான காணி வழங்கல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு இணைந்ததாக தனி வீட்டு திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. அவற்றில் பல வீட்டு திட்டங்கள் எமது காலப்பகுதியில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
எனினும் 2018 ஆம் ஆண்டு இறுதி காலம் முதல், 2019 ஆம் ஆண்டின் இறுதி காலம் வரை ஆரம்பிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் உள்ளன. அவை எமது அரசாங்கம் முடிவுக்கு வருகின்ற போது அரைவாசி கட்டப்பட்ட வீடுகளாக இருந்தது. ஆனால் இன்று இரண்டு வருடங்கள் கடந்தும் அவை அதே நிலையிலேயே உள்ளது. அவற்றின் அபிவிருத்திக்காக ஒரு சதமேனும் நிதி ஒதுக்கப்படவில்லை.
ஹேவாஹெட தொகுதியின், லூல்கந்துர தோட்டத்தின், தோட்ட வீடமைப்பு அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வீடுகள் அரைகுறையாக கைவிடப்பட்டுள்ளது. ஊராகளை மற்றும் ஹந்தானை தோட்டத்தில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யாது அரைகுறை நிலையில் உள்ளது.
இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ், ஹந்தானை தோட்டப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளுக்கும் அதே நிலைமையே காணமுடிகின்றது. தோட்ட பகுதிகளின் நாம் கொண்டு சென்ற வீடமைப்பு திட்டங்கள் முற்றாக இந்த ஆட்சியில் ஸ்தம்பிதம் அடைந்திருக்கிறது.
தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இவை கண்ணுக்கு தெரியாதுள்ளது. இத்தகைய திட்டங்களை பூர்த்தி செய்து மக்களுக்கு வழங்குவதை விட்டு, வேறு ஏமாற்று வேலைகளை செய்து வருகின்றனர். தமது நண்பர்களை, தமக்குதவிய வியாபாரிகளை, சந்தோஷப்படுத்தும் வேலையை செய்து வருகின்றனர். தோட்ட மக்களை ஏமாற்றி, காணி தருகின்றோம், என கூறிக்கொண்டு, தமது சகாக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்க மாவட்டம் முழுவதும் அலைந்து திரிகின்றனர்.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு நாம் ஆரம்பித்து வைத்த திட்டங்களை முன்னெடுக்க இயலுமை இல்லையா? அல்லது இயலுமை இல்லாத பிரதிநிதிகளை கண்டி மாவட்டத்தில் வைத்திருப்பதால் இந்நிலைமையா? அல்லது ராஜாங்க அமைச்சரே இதைப்பற்றி தெரியாமல் இருக்கின்றாரா? என்ற கேள்வியையே மக்கள் சார்பாக நாம் முன்வைக்க வேண்டி இருக்கின்றது.” என்றார்.