மண் மாபியாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட அச்சுறுத்தலாக தற்போது மாறியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.
வேப்பவெட்டுவான் பகுதியில் மேற்கொண்ட களவிஜயத்தினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கோவிந்தன் கருணாகரம் ஜனா மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்காலத்திலும் சட்டவிரோத மண்அகழ்வு தொடருமாக இருந்தால், எமது மாவட்டம் நிர்க்கதியான நிலைமைக்கு செல்லும்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மண் மாபியாக்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.
அண்மையில் இராஜாங்க அமைச்சருடன் வேப்பவெட்டுவான் பகுதிக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தோம். இதன்போது குளம் போல காட்சியளித்த பகுதி இன்று முழுமையாக நிரப்பப்பட்டிருக்கின்றது.
இதற்கு எங்கிருந்து மண் கிடைக்கப்பெற்றது என்பது குறித்து உரிய பதில்கள் இல்லை.
மேலும் தான் வழங்கிய அனுமதியை மீறி சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெற்றுள்ளதாக புவிச்சரிதவியல் திணக்கள அதிகாரி கூடக் கூறுகின்றார்.
ஆகவே இவ்விடயத்திற்கு ஒரு நிரந்தர முடிவினை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.