நாட்டில் இடம்பெறுகின்ற காடழிப்பினை உடனே தடுத்து நிறுத்தும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “காடழிப்பு உட்பட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தன்னை நீக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
மேலும் கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வர உதவிய மகா சங்கமும் அறிவுசார் குழுக்களும் இப்போது ஜனாதிபதியை விட்டு விலகியுள்ளனர்.
மேலும் காடழிப்பு இடம்பெறுவதாக பெரும்பான்மையான குருமார்கள், அரசு அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் ஜே.வி.பி என பலரும் குரல் எழுப்பும்போது இதுபோன்ற பேரழிவு எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள்.
இந்நிலையில் எது எவ்வாறாயினும் காடழிப்பு செயற்பாடுகளை தடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.