மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் இறுதி கிரியைகளுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
மன்னார் ஆயர் இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை இன்று காலை இறைபாதம் அடைந்ததை ஆழ்ந்த அனுதாபத்துடன் உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
மன்னார் மறைமாவட்டத்தில் சுடர்விட்டு பிரகாசித்த ஒளி விளக்கு இப்போது அணைந்து விட்டது.
2015ஆம் ஆண்டு ஆயர் நோய்வாய்ப்பட்டதினால் அதன் பின்னர் சிகிச்சைகள் பெற்று வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக அவர் நோய்வாய்ப்பட நிலையில், அவரை யாழ்ப்பாணம் திருச்சிலுவை கண்ணியர் மட வைத்தியசாலையில் அனுமதித்திருந்தோம்.
அங்கே சிகிச்சைப் பெற்று வந்த ஆயர் இன்று காலை எம்மை விட்டு பிரிந்தார். அவருடைய இறுதி நல்லடக்கத்துக்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் மறைமாவட்டத்தில் ஆலோசனைக்குழு குருக்களுடன் கலந்தாலோசித்து ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆயரின் திருவுடல் யாழ். ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்படும். நாளை காலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் மறை மாவட்டத்திற்கு பவனியாக எடுத்து வரப்படும்.
பின்னர் மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் பெரிய வெள்ளி அன்று சிற்றாலயத்தில் மதியம் 2 மணியில் இருந்து அஞ்சலிக்காக வைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து மக்கள் வந்து இறுதி அஞ்சலியை செலுத்த முடியும். ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் ஒரு பவனியாக அவரது பூதவுடல் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் திங்கட்கிழமை மதியம் 2 மணி வரை பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி அளவில் பேராலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இலங்கையின் அனைத்து ஆயர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுப்பார்கள். அதனைத் தொடர்ந்து பூதலுடல் பேராலயத்தில் அடக்கம் செய்யப்படும்.
இறுதி சடங்கு கட்டுப்பாட்டுடன் இடம்பெற உள்ளமையினால் மக்கள் அதற்கு முன்னதாக உங்களின் இறுதி அஞ்சலியை மன்னார் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் அல்லது பேராலயத்தில் செலுத்திக்கொள்ள முடியும்.
இறுதி இடக்க திருப்பலியில் அனைவரும் ஒன்று கூடக்கூடிய சந்தர்ப்பம் இல்லை. கொரோனா தொற்று நோய் காரணத்தினால் சுகாதார கட்டுப்பாடுகளுடன் திருப்பலி இடம்பெறவுள்ளது.
எனவே நேரத்துடன் வந்து ஆயருக்கு இறுதி அஞ்சலியை செலுத்திக்கொள்ளுங்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.