கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு ஆதரவளித்த நட்பு நாடுகளில் பெரும்பான்மையை நாங்கள் இழந்துவிட்டோம் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் கரு ஜெயசூரிய மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலத்தில் பல சந்தர்ப்பங்களில், இலங்கை குறித்து மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானங்களில், பெரும்பான்மையினரின் நம்பிக்கையை இலங்கை வென்றெடுக்க முடிந்தது.
ஆனால் அப்போது ஆதரவளித்த பெரும்பான்மையான நாடுகள், தற்போது ஆதரவளிக்க விரும்பவில்லை.
இதற்கு முக்கிய காரணம், தற்போதைய அரசாங்கத்தால் பின்பற்றப்படும் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளாகும்.
இதேவேளை தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர வாக்களித்த பெரும்பான்மையின மக்களின் ஒப்புதல் கூட இல்லாமல் நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் காரணமாக இலங்கை, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பலவீனமடைந்துள்ளது என்ற விடயம் ஜெனீவாவில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.