சீனாவின் தயாரிப்பான கொவிட்- 19 வைரஸுக்கு எதிரான சினோபோர்ம் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு மருத்துவ உத்தரவாதம் இல்லை என முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தடுப்பூசியின் பயன்பாடு மிகவும் ஆபத்தானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜித சேனாரத்ன மேலும் கூறியுள்ளதாவது, ‘இலங்கை தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையகம், சினோபோர்ம் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை .
மேலும் சீன உற்பத்தியாளர், தடுப்பூசி குறித்த எந்த தகவலையும் வழங்கவில்லை. இந்நிலையில் இந்த தடுப்பூசிக்கு அரசியல் ஒப்புதல் மாத்திரம் இருக்கின்றது.
இதேவேளை சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட நிபுணர் குழுவுக்கு பதிலாக அமைச்சர் சன்ன ஜெயசுமனவுக்கு விசுவாசமானவர்கள் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.