தமிழ் மக்களுக்கு தான் எதிரானவன் அல்லன் எனவும் மாகாணசபை முறைமையையே எதிர்ப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – மருதங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “மாகாண சபை முறைமைக்கு சரத் வீரசேகர ஆகிய நான் எதிரானவனே. இதனை அன்றும் எதிர்த்தேன், இன்றும் எதிர்க்கிறேன், நாளையும் அதே கருத்தைத்தான் கொண்டுள்ளேன். அது இந்தியாவால் எமக்குப் பலவந்தமாகத் திணிக்கப்பட்ட ஒன்று.
மாகாணசபை முறைமை என்பது ஒரு தேவையற்றதாகும். மத்திய அரசாங்கம் என்பது ஒன்றுதான். ஒன்பது மாகாணசபைகள் காணப்படும்போது அந்த ஒன்பது மாகாண சபைக்கும் தனியான நிர்வாகம் காணப்படும். அவ்வாறு ஒன்பது மாகாணத்திற்கும் தனியான நிர்வாகம் இருக்க முடியாது.
ஆனால், அரசாங்கம் மாகாணசபை முறையை வேண்டுமெனத் தீர்மானிக்குமானால் அந்தத் தீர்மானத்தினை நான் எதிர்க்கப்போவதில்லை.
வடக்கில் மாகாணசபை இல்லாது போய் மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. தற்பொழுது அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது. கடந்தமுறை ஆட்சியிலிருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் மத்திய அரசாங்கத்தால் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் அரைவாசி நிதியினைப் பயன்படுத்தாது திறைசேரிக்குத் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலைமைதான் இங்கே காணப்படுகின்றது.
ஆகவே, மாகாண சபை என்பது மக்களுக்குப் பிரயோசனமான ஒரு விடயமாக அமைய வேண்டும். எனினும், வடக்கு மக்கள் மாகாண சபையினை விரும்புகின்றார்கள். அதுவொரு அரசியல் காரணமாக இருக்கலாம். ஆனால், சரத் வீரசேகர ஆகிய நான் தனிப்பட்ட ரீதியில் மாகாணசபை முறைமைக்கு எதிரானவனே.
அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தீர்மானித்தால் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஏற்றவாறு நான் செயற்படத் தயாராக உள்ளேன். எனினும், நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன்” என்று குறிப்பிட்டுள்ளார்.