முன்னாள் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ், பதவியில் இருந்து நீக்கப்பட்டமை சட்டரீதியாக மேற்கொள்ளப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் மொஹான் பீரிஸ் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறு சட்டரீதியாக நியமிக்கப்பட்டவரை, ஜனாதிபதியின் விருப்பப்படி அவருடைய செயலாளரின் கடிதத்தின் ஊடாக நீக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுஜன பெரமனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னக்கோன், மொஹான் பீரிஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அலி சப்ரி இவ்வாறு பதிலளித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த வேளையில், அவரது அறிவுறுத்தலின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர், அப்போதைய தலைமை நீதிபதி மொஹான் பீரிஸுக்கு பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார்.
இந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் அலி சப்ரி மேலும் கூறியுள்ளதாவது, “ தவறை சரிசெய்ய வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க தற்போதைய அரசாங்கம் தயாராக உள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தேவையான ஆலோசனையைப் பெறுவார் என்று நம்புகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.