இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தனர்.
இதனையடுத்து, இன்று காலை 06 மணியுடன், முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டறியப்பட்ட 221 கொரோனா நோயாளர்களில் இவர்களும் அடங்குவதாக கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், யாழ்ப்பாணத்தில் இருந்து 46 பேரும், ரத்னபுரவைச் சேர்ந்த 29 பேரும், கண்டியைச் சேர்ந்த 16 பேரும், களுத்துறையைச் சேர்ந்த 12 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அந்த மையம் தெரிவித்துள்ளது.
ஏனையவர்களில் கம்பஹாவில் 02 பேர், குருநாகலில் 02 பேர், காலியில் 08 பேர், கிளிநொச்சியில் 6 பேர், மாத்தறையில் 05 பேர், மொனராகலையில் மூவர், அம்பாறை, ஹம்பாந்தோட்டையில் தலா 02 பேர், கேகாலை, மாத்தளை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஏனைய 31 பேரும் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
சுகாதார அதிகாரிகள் நேற்று 6 ஆயிரத்து 591 பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்டதை அடுத்து இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இலங்கையில் இதுவரையில் 93 ஆயிரத்து 992 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில், 90 ஆயிரத்து 916 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 485 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், இலங்கையில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 591 ஆக அதிகரித்துள்ளது, நேற்று மேலும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளதையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேநேரம், நாடு முழுவதும் அமைந்துள்ள 102 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 10 ஆயிரத்து 547 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.