இலங்கையில் உள்ள நான்கு பிரதான மீன்பிடித் துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு பிரான்ஸ் ஆர்வமாக உள்ளதாக அந்நாட்டு தூதுவர் எரிக் லெவரூட் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவரூட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.
கடற்றொழில், நீர்வேளாண்மை ஆகிய துறைகளில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி தொடர்பாக இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் தூதுவர், தென்பகுதியிலுள்ள காலி, பேருவளை, குடாவெல்ல மற்றும் குரானவெல்ல ஆகிய நான்கு மீன்பிடித் துறைமுகங்களை அபிவருத்திசெய்ய பிரான்ஸ் அரசாங்கம் ஆர்வமாகவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், அபிவிருத்தி தொடர்பான ஆராய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதற்கான பணிகள் ஆரம்மாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனைவிட, இலங்கையில் கண்ணாடி நாரிழையில் அமைக்கப்பட்ட படகுகள் சுற்றாடல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த தகுந்த கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்றும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு தொழிற்றுறைப் பயிற்சிகளை வழங்குவதற்கும் பிரான்ஸ் ஆர்வம் கொண்டுள்ளதாக எரிக் லெவரூட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கடற்றொழில் துறையில் வளமான எதிர்காலம் உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த துறையை அபிவிருத்தி செய்வதன் ஊடாக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்று கூறினார்.
மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில் துறையில் அபிவிருத்திக்கு பிரான்ஸ் உதவ வேண்டுமென அவர் இதன்போது பிரான் தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.