தியவன்ன ஓயா மாசடைந்துள்ளமை தொடர்பாக இதுவரை எந்ததொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று, (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றம் கூடியது.
குறித்த நாடளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த மார்ச் 24ஆம் திகதி, புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், தியவன்ன ஓயா மாசடைந்துள்ளமை மற்றும் நீரின் நிறம் மாற்றம் தொடர்பாக சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
குறித்த சுற்றாடல் மாசடைந்துள்ளமை தொடர்பாக தேடிப்பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன்.
இதன்போது அரசாங்கத்தைச் சேரந்த பிரதிநிதிகள் கூறினார்கள். நான், மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு கருத்து வெளியிடுவதாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இன்னும் குறித்த தியவன்ன ஓயா சுற்றாடல் மாசடைந்தவாரே காணப்படுகின்றது.
மேலும் நாடாளுமன்றத்திற்கு முன்னால் இருக்கும் நீர் தடாகம் தூய்மைப்படுத்தப்படுகின்றமையினால் அதன் நீர் தியவன்னா ஓயாவுக்கு அனுப்பப்பட்டது. ஆகையினால் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என குறிப்பிட்டார்கள்.
அதனை சுத்தப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென சபாநாயகர் கடந்த நாடாளுமன்ற அமர்வில் கூறியிருந்தார். ஆனால் இன்னும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை” என குறிப்பிட்டார்.
இவ்வாறு சஜித் கேள்வி எழுப்ப ஆரம்பித்ததும் உடனடியாக எழும்பிய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சஜித், சபாநாயகர் அறிவிப்பு வழங்குவதற்கு முன்னரே உரை நிகழ்த்தியமை சம்பிரதாயத்துக்கு முரணானது என குற்றம் சுமத்தினார்.
இதனால் சபையில் சிறிதளவு சலசலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சபாநாயகர், தனது அறிவிப்புக்கு பின்னர் உரை நிகழ்த்துதமாறு சஜித் பிரேமதாசவுக்கு அறிவித்தார்.