இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரி உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 11 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை இவ்வாறு போராட்டம் நடைபெற்றுள்ளது.
சாவகச்சேரி மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் ஏற்பாட்டிர் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் மதம் மாற்றிகள் மூலம் சைவ சமயத்திலிருந்து மக்கள் வேறு மதங்களுக்குச் செல்லமாட்டார்கள் என மறவன்புலவில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் பௌத்தம் மற்றும் இந்து மதங்கள் பாதுகாக்கப்படும் என்பதோடு அவ்வாறு இல்லாவிட்டால் குறித்த இரு மதங்களும் மதம் மாற்றிகளால் மாற்றப்பட்டுவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக கிழக்கு இலங்கையில் மதம் மாற்றிகளின் செயற்பாடுகள் மிகவும் அதிகரித்துள்ளதாக சச்சிதானந்தம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்து மக்கள் பசுவை கோமாதா என வணங்கிவரும் நிலையில், மாடுகளை வெட்டி உண்ணும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அவர் கோரியுள்ளார்.
மேலும், பாலைவனங்களிலேயே மாடுகளை அறுத்து உண்பார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை ஒரு சோலைவனம் என்பதால், இங்கே மாடுகளை கோமாதா என்று நினைத்து வணங்குவதுடன் அவைகளைப் பாதுகாத்திட வேண்டும் என மறவன்புலவு சச்சிதானந்தம் கூறியுள்ளார்.
படம்: வவுனியா சிதம்பரபுரம் பழனிமுருகன் ஆலயத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட உணவுத் தவிர்ப்புப் போராட்டம்