கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் அமைந்துள்ள உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்க முயற்சிக்கப்படலாம் என்பது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன் ஆகியோர் தலைமையில் உருத்திரபுரீஸ்வரர் கோயிலின் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்றது.
இதில், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
உருத்திரபுரீஸ்ரர் கோயில் வளாகத்தில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கும் கோணத்தில் அப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்கலாம் என்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதன்பின்னர், குறித்த குழுவினர் ஆலய வளாகத்தில் காணப்பட்ட பண்டைய காலத்து கருங்கல் தூண்களையும் பார்வையிட்டிருந்தனர்.