அரசாங்கம் தற்போது பொதுத்துறை ஊழியர்களின் ஊதியங்களுக்காக மட்டுமே ஆண்டுக்கு சுமார் 900 பில்லியன் ரூபாயைச் செலவிடுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் நேற்று (14) நடைபெற்ற சுகாதார சேவையின் மனித வள ஆற்றலை வலுப்படுத்தி, வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களின் நிர்வாக, செயற்பாட்டு மற்றும் துணைச் சேவைப் பணிகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், நான்கு சேவைப் பிரிவுகளின் கீழ் 223 உத்தியோகத்தர்களுக்குப் நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் உயிரியல் மருத்துவப் பொறியியல் பிரிவின் புதிய கேட்போர் கூடத்தில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.
இதற்கமைய, அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு 36 பேருக்கும், களஞ்சியப் பொறுப்பாளர் பதவிக்கு 27 பேருக்கும், சிற்றூழியர் மேற்பார்வையாளர் பதவிக்கு 06 பேருக்கும், சுகாதாரப் பணி உதவியாளர் பதவிகளுக்கு 154 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய சுகாதார அமைச்சர், பொதுத்துறை ஊதியங்கள் உள்ளிட்ட இத்தகைய அனைத்துச் செலவினங்களும், பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி வருவாயைக் கொண்டே ஈடுகட்டப்படுகின்றன.
எனவே, பொதுத்துறை ஊழியர் ஒவ்வொருவருக்கும், பொது நிதியைப் பயன்படுத்துவது குறித்த தெளிவான புரிதலுடனும் பொறுப்புணர்வுடனும் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு உண்டு.
இந்த மாத இறுதிக்குள் சுகாதாரத் துறையில் ஆரம்ப நிலை மருத்துவ அதிகாரிகள் 1,600 பேர் பணியமர்த்தப்படவுள்ளனர்.
அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஊதிய மாற்றங்களின் பலன்களை, புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளர்களும் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
இதன்படி, அடிப்படை ஊதிய உயர்வு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.













