முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று (14) இரவு 11.50 மணியளவில் காலமானார்.
கடந்த 3 ஆம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கு முன்னர், கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து சில வாரங்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், அரசியல் நீதிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் தனது அரசியல் வாழ்வில் தொடர்ந்து குரல் கொடுத்தவர் சிவாஜிலிங்கம் ஆவார்.
வல்வெட்டித்துறையின் மண்ணில் பிறந்து, கரையோர மக்களின் பிரச்சினைகளையும் உணர்வுகளையும் தனது அரசியல் பயணத்தின் மூலம் வெளிப்படுத்தியவர்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், உரிமைகள் மற்றும் தேசிய உணர்வுகள் தொடர்பாகத் துணிச்சலுடன் தனது கருத்துக்களை முன்வைத்து வந்தவர்.
அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பான விடயங்களில் அவர் ஆற்றிய பங்களிப்பும், நீண்டகால அரசியல் பயணமும் நினைவுகூரப்பட வேண்டியவை.














