முதலாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு ஏப்ரல் 14 முதல் நான்கு வாரங்களில் இருந்து ஆறு வாரங்களுக்கு பின்னர் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடயத்தினை சுகாதார அமைச்சர் ஒலிவர் வேரன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்.
பிரான்சின் உயர்மட்ட சுகாதார ஆணைக்குழு ஜனவரி மாதத்தில் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான காலத்தை ஆறு வார காலத்திற்கு நீடிக்க அறிவுறுத்தியது.
இருப்பினும் அந்த நேரத்தில் நீண்ட கால இடைவெளியில் தடுப்பூசிகள் எவ்வளவு சிறப்பாகச் செய்யப்பட்டன என்பது குறித்து போதுமான தகவல்கள் இல்லை என அரசாங்கம் கூறியுள்ளது.
பைசர் / பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளைப் பயன்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் அனுமதியை வழங்கியுள்ளது.
இந்நிலையில் திங்கட்கிழமை முதல் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி 55 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கிடைக்கப் பெறும் என்றும் பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.