தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மாறுபட்ட கொரோனா வைரசானது ஃபைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா தடுப்பு மருந்தின் திறனை குறிப்பிட்டளவு செயலிழக்கச் செய்வதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நிலையில் மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பி.1.351 (B.1.351) என்ற மாறுபட்ட வைரஸ் இஸ்ரேலில் மொத்தமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் ஒரு வீதத்தினருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்கள் அனைவரிடமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் ஃபைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா தடுப்பு மருந்தின் திறன் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இதன்படி, சாதாரண கொரோனா வைரஸ் மற்றும் பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட மாறுபாட்ட வைரஸ் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட மாறுபாட்ட வைரசுக்கு எதிராக குறித்த தடுப்பூசி குறைவான செயற்றிறனையே காட்டுகிறது.
எனவே, தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட மாற்றமடைந்த கொரோனா வைரசால் ஓரளவிற்கு தடுப்பூசியின் பாதுகாப்பை உடைக்க முடியும் என குறித்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஆதி ஸ்டெர்ன் கூறியுள்ளார்.