ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்கள், எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் மீள பெறப்படும் என ஆப்கான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினரையும் மீள அழைப்பதில் உறுதியாகவுள்ளன அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இதுதொடர்பான அறிவிப்பை இன்று (புதன்கிழமை) வெளியிடுவார் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி, நியூயோர்க் இரட்டை கோபுரங்கள் அல்கொய்தா பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானது.
உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த தாக்குதலில், ஏறக்குறைய மூவாயிரம் பேர் உயிரிழந்ததோடு 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த தாக்குதலை நடத்திய அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை அடியொடு அழிப்பதில் அமெரிக்கா தீவிரமாக செயற்பட்டது.
இந்தநிலையில், அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பினர், அடைக்கலம் கொடுத்தாக தகவலறிந்த அமெரிக்கா, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானில் தங்களது படைகளை களமிறக்கியது.
இதன்போது, ‘செப்.11’ தாக்குதலைத் திட்டமிட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் பாகிஸ்தானில் 2011ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
அப்போதிலிருந்தே ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க வீரர்கள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றனர். அத்துடன் தலிபான்- ஆப்கான் அரசாங்கத்தும் இடையிலான அமைதி ஒப்பந்தத்திலும் அமெரிக்க படையை வெளியேற்றுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.