தமிழ் இனம் சார்ந்த அரசியலை உருவாக்காவிட்டால் மாற்றுச் சமூகத்தால் துண்டாடப்படுவோம் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
காரைதீவில் நிகழ்வொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “தமிழ் தேசியம் என்று சொல்லப்படுகின்ற தூய்மையான அரசியலை முன்னெடுக்கின்ற அரசியல்வாதிகளால் மாத்திரமே எமது மக்களின் பிரச்சினை குறித்தான விடயங்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
நாங்கள் யாருக்கும் சோரம்போய் சமூகத்தை விற்றுப் பிழைப்பதற்குத் தயாரில்லை. எமது பிரதேசங்களின் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்களாகவே நாங்கள் செயற்படுகின்றோம்.
எமது சமூகம் ஏமாற்றப்படும் சமூகமாக இருந்துவிடக் கூடாது. எமது ஒவ்வொரு பிரதேசங்களிலும் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். உள்ளூர் அரசியலில் மிகவும் சிறப்பாகச் செயற்படக் கூடியவர்களை நாங்கள் இனங்காண வேண்டும்.
எதிர்வருகின்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் எமது இனம்சார்ந்த அரசியலை எமது உறவுகள் மத்தியில் நாங்கள் உருவாக்காவிட்டால் மாற்றுச் சமூகம் எங்களைக் கூறுபோட்டுத் துண்டாடி, எம்மை ஆக்கிரமிக்கக் கூடிய ஒரு நிலைமையே ஏற்படும்.
அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின்போது எமது பிரதேசங்கள் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்பதை பலரும் அறிந்திருப்பார்கள். எனவே, தொடர்ந்து ஏமாற்றுகின்ற விடயங்களுக்கு எமது மக்கள் இடங்கொடுக்கக் கூடாது.
எம்மை நாமே ஆளக்கூடிய, எம்மை எமது மக்களே தெரிவு செய்யக் கூடிய நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் திட்டங்களைத் தயார்ப்படுத்தி எமது மக்களை வளப்படுத்தக்கூடிய விதத்தில் நாங்கள் செயற்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.