இலங்கையில் கொரோனா அச்சம் காரணமாக மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிறிகெத கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மாத்தளை மாவட்டத்தின் உக்குவளை பிரதேசத்தின் பல்லேகும்புர கிராம சேவகர் பிரிவும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திருகோணமலை, கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகள் உட்பட மேலும் சில இடங்கள் நேற்று இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டன.
அதன்படி, கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவின் பொல்ஹேன, ஹீரெலுகெதர,களுவக்கல ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.
மினுவாங்கொடை பொலிஸ் அதிகார பிரிவுக்கு உட்பட்ட அஸ்வென்னவத்தை வடக்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டன.
அதேபோல, களுத்துறை மாவட்டத்தின் மீகாத்தென்னை பொலிஸ் அதிகாரப்பிரிவில் மிரிஸ்வத்தை, மற்றும் பெலவத்தை வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளும் திருகோணமலை பொலிஸ் பிரிவிலுள்ள பூம்புஹார் கிராம சேவகர் பிரிவும் நேற்று இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டன.
காலி மாவட்டத்தின் இரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரு கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய, இம்புல்கொட மற்றும் கட்டுதம்பே ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளும் நேற்று இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.