இலங்கையில் பரவும் கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்ட மாறுபாடுடைய வைரஸ் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநர் வைத்தியர் சந்திமா ஜீவந்தரா தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் வாரத்தில் நாட்டில் பரவும் வைரஸின் மாற்றத்தை சரியாக தீர்மானிக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. இருப்பினும் இதுபோன்ற சாத்தியக்கூறுகளைக் குறைக்க சுகாதார அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் பரவி வரும் வைரஸ் ஒரு பிறழ்வுக்கு உட்பட்டது மற்றும் ஒரு புதிய மாறுபாடாககூட இருக்கலாம் என்று அடிப்படை கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
பண்டிகை காலத்திற்குப் பிறகு கொழும்பு, குருநாகல் மற்றும் கண்டியில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் ஒரு பிறழ்வை அவதானித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றினால் வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
தற்போது இலங்கையில் பரவி வரும் வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் அதிக அளவில் பரவக்கூடியதாகவும் காணப்படுகிறது. எனவே, சரியான ஆராய்ச்சியால் தீர்மானிக்கப்படும் வரை இரண்டு மீற்றர் தூரத்தை பராமரிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.