கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரும், யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தார்கள் என குற்றஞ் சாட்டப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின், வருடாந்திர பெருந்திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். மேலும் 50 பக்தர்கள் மாத்திரமே ஆலயத்தில் ஒரே நேரத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.