கரைச்சி பிரதேச சபையினை மூன்றாக பிரிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
கரைச்சி பிரதேச சபையை கிளிநொச்சி நகர சபையாகவும், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச சபைகளாகவும் மூன்றாக பிரிப்பது தொடர்பில் முன்மொழியப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண உளுராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாண உளுளுராட்சி ஆணையாளர், கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், மற்றம் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுவரை காலமும் கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகள் கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் இருந்தது. தற்போது கிளிநொச்சி நகரை மையப்படுத்திய வகையில் நகர சபையாகவும், கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேச சபைகளை தனித்தனியாக உருவாக்குவது தொடர்பில் ஏற்கனவே மும்மொழியப்பட்டிருந்தது.
அதற்கு அமைவாக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில், எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்பதாக பொதுமக்களின் கருத்துக்களை உள்ளடக்கிய கள ஆய்வினை சமர்ப்பிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் விரைவில் கரைச்சி பிரதேச சபையானது மூன்றாக பிரிக்கப்பட்டு மக்களிற்கு சேவைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.