நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சகல பள்ளிவாசல்களிலும் தராவீஹ் மற்றும் ஜும்ஆ தொழுகை உள்ளிட்ட ஏனைய கூட்டுப் பிராத்தனை நிகழ்வுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதே வேளை தொழுகை நேரங்களில் பள்ளிவாசல்களில் அதிகபட்சம் 25 பேர் மாத்திரமே இருக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் தொழுகைக்காக வருகை தரும் சந்தர்ப்பங்களில் விரிப்புகளைக் கொண்டு வருமாறும் வீடுகளிலேயே தொழுகை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பள்ளிவாசல்கள் மூடப்பட வேண்டும் எனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினாலும் வக்பு சபையினாலும் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயங்களை பின்பற்றுவதற்கு நடைமுறை சிக்கல்கள் காணப்படுமாயின் பள்ளிவாசல்களை மூடுவதற்கு உரிய நிர்வாகத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி சகல பள்ளிவாசல்களிலும் தராவிஹ்,ஜும்மா தொழுகை மற்றும் பயான்கள் கியாமுல் லைல், இஹ்திகாப், தவ்பா போன்ற அனைத்து கூட்டுத் செயற்பாடுகளையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்த முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ பி எம் அஷ்ரப் சகல பள்ளிவாசல் நம்பிக்கையாளர் களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.