கொரோனா வைரஸ் தொற்றினால் ஆபத்தான நிலைமைக்கு உள்ளாகியுள்ள கர்ப்பிணிப் பெண்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டுமென மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று கர்ப்பிணித் தாய்மார்கள், தற்போது தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் தலைவர் டாக்டர் பிரதீப் டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணித் தாய், ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இத்தகைய சூழ்நிலையில் தாய்மார்கள், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும் எனவும் பிரதீப் டி சில்வா கூறியுள்ளார்.
அந்தவகையில் குறிப்பாக அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகளவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே உடல் பருமன், நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ள தாய்மார்கள், இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வேலை செய்யும் பொது இடங்களிலிருந்து விலகி இருப்பதும் மிகவும் முக்கியம் என பிரதீப் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி பொருத்தமானது என்று மகப்பேறியல் நிபுணர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.