மன்னார் மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 342 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது மாவட்ட்ததில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவுக்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதாகர் தெரிவித்தார்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (சனிக்கிழமை) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 359 கொரேனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் 342 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மாதம் மாத்திரம் 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 10 கொரோனா தொற்றாளர்கள் ஒரு வாரத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள்.
மேலும் நேற்று (வெள்ளிக்கிழமை) 5 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றமையினால் மக்கள் பொறுப்புடன் செயல்படுமாறு சுகாதாரத் துறை சார்பாக மக்களிடம் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
பொது மக்கள் ஒன்று கூடுவதை முக்கியமாக தவிர்க்குமாறும், குறிப்பாக மதஸ்தலங்கள்,மரணச் சடங்கு போன்றவற்றில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்தக் கொள்ள வேண்டும்.
சென்ற முறை போன்று அல்லாது இம்முறை ஓக்சிஸன் தேவையான நோயளர்களின் எண்ணிக்கை 17 வீதமாக அதிகரித்துள்ளது.
முன்பு இல்லாத வகையில் இம்முறை ஏற்பட்ட கொரோனா தொற்றானது இளைஞர்,யுவதிகளையும் அதிக அளவில் தாக்கி வருகின்றமையினால் வைத்தியசாலைகள் நிறம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தேவையற்ற பயணங்களையும்,தேவையற்ற வகையில் ஒன்று கூடுவதையும் முற்றாக தவிர்த்தக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிற்றோம்.
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக நாட்டிற்கு கடல் மார்க்கமாக வருகை தந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் குறித்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி,கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
தற்போதைய கொரோனா தொற்றானது காற்றின் மூலம் பரவும் என அடையாளம் காணப்பட்டமையினால் மக்கள் நெருக்கமான இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக முகக்கவசத்தை உரிய முறையில் மூக்கு,வாய் உள்ளடங்களாக அணிய வேண்டும்.
வர்த்தக நிலையங்கள் வியாபார ஸ்தாபனங்கள்,தொழில் நிறுவனங்கள் , அரச திணைக்களம் போன்றவற்றில் மக்கள் உரிய முறையில் முகக்கவசத்தை அணிவதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மக்கள் எதிர் வரும் இரண்டு வார காலப்பகுதிக்கு மிகவும் அவதானமாக செயல் படுமாறும்,தேவையற்ற ஒன்று கூடல்,பயணங்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் மன்னார் மாவட்டம் மற்றும் வடமாகாண மீனவர்கள் இந்திய மீனவர்களுடன் உறவை மேற்கொண்டு வரும் நிலையில் அவற்றை நிறுத்தி உங்களையும்,உங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார துறை உத்தியோகஸ்தர்களுக்கான 2 ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மாவட்டத்தில் 60 வீதமான சுகாதார துறையினருக்கு 2 ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.சில நாற்களில் பூரணப்படுத்தப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.