முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரண்டு மகன்கள் மற்றும் மேலும் இருவரை எதிர்வரும் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் சதோச நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மகன் ஜோஹான் பெர்னாண்டோ, இளைய மகன் ஜெரோம் கென்னத் பெர்னாண்டோ மற்றும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
லங்கா சதோசாவுக்குச் சொந்தமான லொறி உட்பட அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த துஷ்பிரயோகம் அரசுக்கு கணிசமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சதொச நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் எத்தனோல் நிறுவனத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், இதன் விளைவாக அரசுக்கு 2.5 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.












