நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மதுவரித் திணைக்களத்தின் அனுமதி பெற்ற சகல நிலையங்களுக்குமான கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் இன்று (வியாழக்கிழமை) இந்த கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் இலங்கையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த வழிகாட்டல்களுக்கு அமைய மதுவரித் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மதுபானசாலைகள் அனைத்தும் அனுமதி வழங்கப்பட்ட காலப்பகுதியில் மாத்திரம் திறக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மதுவரித் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள உணவகங்களை இரவு 10 மணியுடன் மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மதுபானசாலைகள் மறுஅறிப்பு வரை மூடப்படுதல் வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சில்லறை விற்பனை உரிமம் F.L 4 (வைன் ஸ்டோர்ஸ்) மற்றும் F.L 22 A வகை உரிமம் கொண்ட மதுபானசாலைகள் அனுமதிக்கப்பட்ட காலப்பகுதியில் மாத்திரம் திறக்கப்படவேண்டும்.
வாடி வீட்டு உரிமம் (F.L 12) பெற்றுள்ள மதுபானசாலைகள் இரவு 10 மணிவரைக்கும் திறந்திருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விடுதி உரிமம் (F.L 7) பெற்றுள்ள விடுதிகள், சுற்றுலாப் பயணிகளுக்காக மாத்திரம் இரவு 10 மணிவரை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைவிட, வெளிநாட்டு மதுபானசாலைகள் மற்றும் கள்ளுத் தவறணைகள் (F.L 5), விடுதி மதுபான நிலைய விற்பனை உரிமம் (F.L 8) கொண்டவையும் களியாட்ட மதுபான விற்பனை நிலைய உரிமம் (F.L 9) உள்ளவையும் போசன சாலை உரிமம் (F.L 11), விடுதி உரிமம் F.L 22 B வகை உரிமங்கள் உள்ள மதுபான சாலைகள் மறுஅறிவிப்புவரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.