ஐ.எஸ் பயங்கராவாத அமைப்பு ஒரு நாட்டில் மட்டும் அல்ல உலக அளவில் பல பெயர்களில் செயற்பட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஐ.நா சபைக்கான இந்தியாவின் நிரந்தர துணை தூதர் ரவிந்திரா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், ”ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, ஒரு நாட்டில் மட்டும் செயற்படும் அமைப்பல்ல. இந்த அமைப்பு பல்வேறு பெயர்களில் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
பல நாடுகளில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் ஐ.எஸ் உடன் இணைந்துள்ளன. மேற்காசிய நாடான ஈராக்கில் மக்கள் மீது ஐ.எஸ் அமைப்பு கொடூர தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 39 இந்தியர்கள் உட்பட அப்பாவி மக்கள் பலர் பலியாகியுள்ளனர்.
அதனால் ஐ.எஸ் அமைப்பை ஒரு நாட்டில் செயல்படும் அமைப்பாக பார்க்காமல், உலகத்துக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அமைப்பாக கருதி, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.