அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது.
அந்த அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான கமரூன் பன்கிராஃப்ட் விதி முறைகளுக்கு முரணாக பந்தை ஒரு பக்கம் தேய்த்து அதன் தன்மையை மாற்ற முயற்சித்தது கமரா பதிவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. பந்து ‘ஸ்விங்’ ஆக வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்ததும், இதற்குக் பின்னணியில் துணைக் கப்டன் டேவிட் வோர்னர் செயல்பட்டதும், இது விதிமுறைக்கு புறம்பானது என்று அறிந்திருந்தும் கப்டன் ஸ்டீவன் ஸ்மித் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டதும் விசாரணைகளில் தெரியவந்தது. அவர்கள் தங்களது தவறைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர்.
இது குறித்து விசாரணை நடத்திய அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை பன்கிராஃப்ட்டுக்கு 9 மாதமும், சுமித் மற்றும் வார்னருக்கு ஓராண்டும் தடை விதித்தது. சுமித் கப்டன் பதவியையும் இழந்தார். டேவிட் வொர்னருக்கு தேசிய அணியின் பதவிகளை வகிக்க ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பன் கிராஃப்ட் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள அவரிடம், ஊடகமொன்றினால் ‘நீங்கள் பந்தை சேதப்படுத்திய யுக்தி அணியின் மற்ற பந்து வீச்சார்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நிச்சயமாக!’ என்று பதில் அளித்திருக்கிறார்.
‘நான் இவ்வாறு செய்தது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே அனேகமாக அவர்களுக்கு இது தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், யார் யாருக்கு தெரிந்திருந்தது என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.
அந்த டெஸ்டில் பட் கமின்ஸ், மிட்ச்செல் ஸ்டார்க், நதன் லயன், ஹசில்வுட், மிட்ச்செல் மார்ஷ் ஆகிய அவுஸ்ரேலியாவின் முன்னணிப் பந்துவீச்சாளர்கள் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பன் கிராஃப்டின் இந்த தகவல்கள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை, ‘பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் புதிய தகவல்கள் இருந்தால் தங்களுக்கு அனுப்பலாம். அது குறித்து மீண்டும் விசாரிக்கப்படும்’ என்று கூறியிருக்கிறது. இதனால் இந்தப் பிரச்சினை மீண்டும் கிளறப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.