30 வருட கால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினரின் தியாகங்களை ஜெனிவா உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச அரங்கிலும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் ஆற்றிய விசேட உரையின்போதே இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “30 வருட காலமாக இலங்கையில் நீடித்த யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்து இன்றுடன் 12 வருடங்களாகியுள்ளன.
அனைத்து தரப்பு மக்களையும் பாதித்த இந்த யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்து வடக்கு- கிழக்கு மக்களின் அச்ச வாழ்க்கைக்கும் நாம் முற்றுப்புள்ளி வைத்தோம்.
இன்று அச்சமின்றி அனைத்து மக்களும் வாழ்க்கிறார்கள். இந்த வெற்றியானது வடக்கு- கிழக்கு மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் உரித்தானதாகும்.
வடக்கு- கிழக்கில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி ஜனநாயகத்தையும் நாம் நிலைநாட்டியுள்ளோம். இதனை அனைவரும் அறிவார்கள்.
எவ்வாறாயினும் இந்த வெற்றியை நாம் இலகுவாக அடைந்துவிடவில்லை.
பல்லாயிரக்கணக்கான உயிர்களைத் தியாகம் செய்தோம். பலர் உடல் உறுப்புக்களை இழந்தார்கள்.
இவ்வாறான இராணுவத்தினரை நாம் தொடர்ந்தும் கௌரவித்து வருகிறோம். பதவி உயர்வுகள், அவர்களுக்கான வைத்தியசாலைகள் என அனைத்தையும் நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
உலகிலேயே மோசமான தீவிரவாதத்தை வீழ்த்தி, ஒட்டுமொத்த உலகுக்கும் நாம் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறோம்.
இவ்வாறான வெற்றிக்குக் காரணமான இராணுவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இதனாலேயே ஜெனிவாவில் இலங்கையின் இணை அனுசரணையுடன் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இருந்து வெளியேறினோம்.
எவ்வாறான சவால்கள் வந்தாலும் நாம் இராணுவத்தினரின் தியாகத்தை காட்டிக் கொடுக்கப்போவதில்லை. எமக்கு எமது நாடே முக்கியமாகும். இந்த நிலைப்பாட்டில் என்றும் மாற்றமில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.