இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு போப் ஆண்டவரிடம் துருக்கி வலியுறுத்தியுள்ளது.
காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் சூழலில், போப் ஆண்டவரை நேற்று (திங்கட்கிழமை) தொலைப் பேசியில் தொடர்புக்கொண்டு பேசிய போதே ஜனாதிபதி தயீப் எர்டோகன் இதனை வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக துருக்கி ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தொலைபேசி உரையாடலின்போது, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போப் ஆண்டவரிடமிருந்து வரும் தொடர்ச்சியான செய்திகளும், எதிர்வினைகளும் கிறிஸ்தவ உலகத்தையும் சர்வதேச சமூகத்தையும் அணிதிரட்டுவதற்கு உதவியாக இருக்கும்.
இஸ்ரேலுக்கு படிப்பினையை அளிக்க சர்வதேச சமூகம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இஸ்ரேலை சர்வதேச சமூகம் தண்டிக்காவிட்டால், பாலஸ்தீனர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.