கிரீன்லாந்து தீவை வாங்க அமெரிக்காவுக்கு எவ்வித திட்டமும் இல்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளின்கன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்து தீவை வாங்க விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், ட்ரம்பின் இந்த விருப்பம் அபத்தமானது என டென்மார்க் பிரதமர் விமர்சிக்கவே, தனது டென்மார்க் சுற்றுப்பயணத்தையும் ட்ரம்ப் இரத்து செய்திருந்தார்.
இந்தநிலையில், விரைவில் டென்மார்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளின்கனிடம் கிரீன்லாந்து தீவை வாங்க அமெரிக்கா இன்னமும் ஆர்வம் காட்டுகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது.
ஆனால், கிரீன்லாந்து தீவை வாங்க அமெரிக்காவுக்கு எவ்வித திட்டமும் இல்லை என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கிடையே எட்டுஇலட்சத்து 11 ஆயிரம் சதுர மைல்கள் அளவிலான பரப்பை உள்ளடக்கிய கிரீன்லாந்து, முற்றிலும் பனிப்பிரதேசம் ஆகும்.
56,000 மக்களைக் கொண்ட ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து, டென்மார்க் இராச்சியத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் பரந்த சுயாட்சியைக் கொண்டுள்ளது.
காற்றாலை விசையாழிகள், மின்சார வாகனங்கள் மற்றும் போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் நியோடைமியம் உள்ளிட்ட அரிய பூமி உலோகங்கள் கிரீன்லாந்தில் உள்ளது. அத்துடன் கடல் வழியாக அணுகல் எளிதானது.