கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை செயற்படுத்த, இது சரியான நேரம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் கணிசமான உயிரிழப்பை ஏற்படுத்தும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த அரசாங்கம் தற்போதைய நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி மிகவும் சிந்திக்காமல் அதனை ஒதுக்கி வைத்து துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை செயற்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக குற்றம் சாட்டினார்.
அரசியல்வாதிகள் மிகவும் நெகிழ்வானவர்களாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக மற்ற கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை தொடர்ந்து எதிர்ப்பதற்குப் பதிலாக மக்கள் மீதான அக்கறையோடு பேசும் அவர்களை அழைத்து கலந்துரையாட வேண்டும் என்றும் கூறினார்.
தற்போதைய இலங்கை அரசியலமைப்பிற்கு முரணாக இருக்கும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் 29 திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.