‘கிரிக்கெட் உலகின் போர்’ என வர்ணிக்கப்படும் இங்கிலாந்து- அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
72ஆவது அத்தியாயமாக நடைபெறும் இத்தொடர், இம்முறை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு போட்டியாக அடிலெய்டில் நடைபெறவுள்ளது.
கடந்த முறை இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த தொடர், வெற்றி-தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது. ஆனால் நடப்பு சம்பியனாக அவுஸ்ரேலிய அணியே திகழ்கின்றது.
நடப்பு தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 16ஆம் திகதி அடிலெய்டிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் திகதி (பொக்ஸிங் டே டெஸ்ட்) மெல்பேர்ன் மைதானத்திலும், நான்காவது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் திகதி சிட்னி மைதானத்திலும், ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 14ஆம் திகதி பெர்த் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் டெஸ்ட் தொடர்களில் 33 தொடரை அவுஸ்ரேலியாவும் 32 தொடரை இங்கிலாந்து வெற்றிகொண்டுள்ளன. இதில் ஆறு தொடர்கள் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
அத்துடன் மொத்தமாக நடைபெற்ற 335 டெஸ்ட் போட்டிகளில், 136போட்டிகளில் அவுஸ்ரேலியாவும் 108போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றிபெற்றுள்ளன. 91போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.