கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றவர்கள் வசதி குறைந்தவர்களோ அல்லது சாப்பிட வழியில்லாதவர்களோ அல்ல. ஆகவே போசாக்கு மிக்க உணவுகளை அவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் பெரியகல்லாறு பகுதியிலுள்ள வைத்தியசாலைக்கு, நேற்று (ஞாயிற்றுக்கிழமை)விஜயம் மேற்கொண்ட இரா.சாணக்கியன், நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்ற உணவின் தரம் குறித்து ஆராய்ந்த பின்னர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவின் தரம் தொடர்பாக பலரும், இரா.சாணக்கியனின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்த நிலையில் திடீர் விஜயத்தினை இரா.சாணக்கியன் மேற்கொண்டு இருந்தார்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “பெரியகல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் பலர், வழங்கப்படுகின்ற உணவு தொடர்பாக முறைப்பாடுகளை முன்வைத்திருந்தனர்.
அதனடிப்படையிலேயே இங்கு வருகைத் தந்து உணவின் தரம் தொடர்பாக ஆராய்ந்தேன். அதாவது இந்த வைத்தியசாலையில் 150 கட்டில்கள் உள்ளன. ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு சாப்பாட்டிற்கான செலவு 850 ரூபாய் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது.
இருப்பினும் வழங்கப்படுகின்ற உணவின் தரம் குறித்து, வைத்தியசாலையில் பணியாற்றுபவர்களே குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
மேலும் மக்கள், கொரோனா தொற்று காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களே தவிர எந்த வகையிலும் வசதி குறைந்தவர்களோ அல்லது சாப்பிட வழியில்லாதவர்களோ அல்ல என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே போசாக்கு மிக்க உணவுகளை வழங்க வேண்டியது உணவு வழங்குபவர்களின் முக்கிய கடமையாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.