இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை தொடர்பான பயண அறிக்கையில் அமெரிக்காவினால் எச்சரிக்கப்பட்டதன்படி, இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என அந்த அறிக்கையில் அமைச்சு அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளிவிவகாரத் துறையினால் வழக்கமாக வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு 4ஆம் நிலை பிரிவு பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதஷது என தெரிவித்துள்ளது.
கொரோனா அவசர நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக இவ்வாறான அமெரிக்கா பயண ஆலோசனை வழங்கப்படுகிறது என்ற போதிலும் இந்த எச்சரிக்கையில் பயங்கரவாத அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகளின் பிரகாரம் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தற்போது எந்த அறிக்கையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் சில நாட்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
எனவே அமெரிக்கப் பிரஜைகள், இலங்கைக்கு செல்வதை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளும்படி அந்நாட்டு அரசாங்கம் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.