கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பரவலுக்கு உள்ளான எம்.வி.எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது குறித்த கப்பல் முழுவதிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் பணிகளில் கடற்படை, துறைமுக அதிகார சபை உள்ளிட்ட தரப்பினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுடன், இந்தியாவின் சமுத்திர பாதுகாப்பு கப்பலும் விமானமும் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குறித்த கப்பலில் இருந்து வெளியேறிய எரிபொருள் கடலில் கலந்தமையினால் ஏற்படக்கூடிய அபாயம் மற்றும் கடலுணவுகளை உட்கொள்வது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள நாரா நிறுவனத்தின் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சாமலி வீரசேகர, தற்போதைய நிலையில், கடந்த 5, 6 நாட்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை என்பதால் எவ்வித பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் மீன்களின் மாதிரிகளைப் பெற்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சம்பவத்தினால் நாட்டில் வளிமாசடைவு ஏற்படாது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி. எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலில் நைட்ரையிட் கசிவு காரணமாக கடந்த 19ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டமை குறி்பபிடத்தக்கது.