அரசாங்கம் வெளியிட்டிருந்த அறிவிப்புக்கமைய காய்கறிகளை வாங்கவும் விற்கவும் தம்புல்ல பொருளாதார நிலையத்துக்கு வந்த அனைவரும் திரும்பி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக விவசாயிகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மொத்த விற்பனையாளர்கள், பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பொருளாதார நிலையங்கள், மூன்று நாட்களுக்கு திறந்திருக்கும் என்று நேற்று (வெள்ளிக்கிழமை) அரசாங்கம் அறிவித்துள்ளதாக தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடாக அறிந்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது.
குறித்த தகவலுக்கமையவே தம்புல்ல பொருளாதார மையத்திற்கு நாம் இன்று வந்தோம். ஆனால் மூடப்பட்டு காணப்படுகின்றது என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், விவசாயிகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் பல மணிநேரம் அங்கேயே காத்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக தொழிற்சங்கத் தலைவர் யு.பி.ஏகநாயக்க கூறியதாவது, “தம்புல்ல பொருளாதார நிலையத்தின் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் 29 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால் குறித்த நிலையத்தை இன்று மீண்டும் திறக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தம்புல்ல பொருளாதார நிலையத்தை எதிர்வரும் 30,31 ஆம் திகதியன்று திறப்பதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏகநாயக்க கூறியுள்ளார்.