பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு கல்வி அமைச்சரிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், கல்வி அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக அதிகளவான குடும்பங்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மேலும் இத்தகைய சூழ்நிலையில் உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கான மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளை கவனத்தில் கொள்ளாமல், எதிர்வரும் ஜுன் 11 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாட்டுக்கு எமது சங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதுடன், இந்த விண்ணப்பத்தை, தற்போதைய நிலைமை சீரடையும் வரை நிறுத்தி வைக்குமாறு கல்வி அமைச்சரை வலியுறுத்துகின்றோம்.
அத்துடன் பல கிராமப் பகுதிகளில் தொலைத் தொடர்பு சாதனங்கள் வசதிகளோ, இணைய வசதிகளோ கிடையாது. ஆகவே இவ்விடயத்தினால் பல மாணவர்கள் அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் மாணவர்களின் பெற்றோர்களும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் மிகவும் அவசரமாக விண்ணப்பம் கோரி, விண்ணப்ப முடிவுத் திகதியை அறிவிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு என்ன தேவை இருக்கின்றது என்பது தொடர்பாக எங்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.