ஒத்திவைக்கப்பட்ட நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடர், மீண்டும் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் விளையாடிய முக்கிய வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி மேற்கிந்திய தீவுகள் வீரர்களான டுவைன் பிராவோ (சென்னை சுப்பர் கிங்ஸ்), கெய்ரன் பொல்லார்ட் (மும்பை இந்தியன்ஸ்), கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன் (பஞ்சாப் கிங்ஸ்), சிம்ரொன் ஹெட்மயர் (டெல்லி கெபிடல்ஸ்), ஜேசன் ஹோல்டர் (சன் ரைசஸ் ஹைதராபாத்), சுனில் நரைன (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) உள்ளிட்டவர்கள் ஆரம்ப போட்டிகளில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடர், நடைபெறுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனினும், இத்தொடரை முன்கூட்டியே முடிப்பதற்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
அப்படி முன்கூட்டியே முடிக்கும் பட்சத்தில் வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் இருந்து ஐ.பி.எல். கொரோனா பாதுகாப்பு வளையத்துக்கு மாற உதவும். 3 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் காலமும் முன்கூட்டியே நிறைவடையும்.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியை சேர்ந்த முக்கிய வீரர்கள் சிலர் ஐ.பி.எல். எஞ்சிய போட்டிகளின் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.
இதேபோல கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலம் கரிபீயன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில் டிரினிடாட் மற்றும் டொபோகோ அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
இதனிடையே கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பெட் கம்மின்ஸ், இத்தொடரில் விளையாட மாட்டார் என தெரிகிறது.
கம்மின்ஸ் நீண்ட நாட்களாக பயோ- பபுள் பாதுகாப்பு வளையத்தில் இருந்து விளையாடியுள்ளார். மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பாததற்கு இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.