தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கு தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள், தங்களது முழு ஆதரவை வழங்கியுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது தொடர்பாக முதலில் கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடல் நடத்தப்பட்டிருந்தது. அதில் பெரும்பாலானோர் தேர்வை நடத்துமாறே வலியுறுத்தி இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில் பங்கேற்றிருந்த அரசியல் கட்சி பிரதிநிதிகள், குறித்த தேர்வு தொடர்பாக தங்களது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி இருந்தனர்.
அதாவது தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க., மனித நேய மக்கள் கட்சி ஆகியன பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தன.
இதேவேளை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், புரட்சி பாரதம், பா.ஜ.க, பா.ம.க, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தேர்வு நடத்த வேண்டாம் என கூறியுள்ளன.
இந்நிலையில் பெரும்பான்மை கட்சிகளின் நிலைப்பாட்டை ஏற்பதாக அ.தி.மு.க.வும் அறிவித்துள்ளது.
எனினும் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து, இறுதி முடிவினை முதலமைச்சரே எடுப்பாரென அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.