கிளிநொச்சியில் இயங்கும் இரு ஆடைத் தொழிற்சாலைகளையும் 14 நாட்களுக்கு இடைநிறுத்திப் பணியாளர்களை வளாகத்திலிருந்து வெளியேற்றும் வகையில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச சபையினால் குறித்த பகிரங்க அறிவுறுத்தல் இன்று (சனிக்கிழமை) எழுத்து மூலமாக இரு ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
தொற்று நோய் கட்டுப்படுத்தல் கருமங்களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல் என தலைப்பிடப்பட்டு குறித்த கடிதம் கரைச்சி பிரதேச சபையினால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில் 147 கொரோனா தொற்றாளர்கள் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் உறுதி செய்துள்ளதாக குறித்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த இரு ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களிடமிருந்து கொரோனா கொத்தணியாக உருவெடுக்கும் அபாயம் காணப்படுவதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
கடந்த 25.05.2021 தொடக்கம் 14.06.2021 வரை அத்தியாவசிய சேவை தவிர்ந்த அனைத்து கருமங்களும் முடக்கப்பட்டுள்ள நிலையில் தொற்றுக் கட்டுப்படுத்தலைத் தடுக்க இடையூறாக அமைந்துள்ளதாகவும் அவ்வறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2500இற்கு மேற்பட்ட பணியாளர்களை நாளாந்தம் பணிக்கமர்த்திச் செயற்பட்டு வருவதனால் முழு சமூகத்திற்கும் தொற்று ஏற்படும் வாய்ப்பான சூழல் காணப்படுகின்றது. இதனையே சாந்தபுரம் கிராமத்தின் முடக்கம் வெளிப்படுத்தியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து கருமங்களையும் உடனடியாகவே நிறுத்தி அனைத்து பணியாளர்களையும் குறைந்தது 14 நாட்களுக்கு வளாகத்திலிருந்து விலக்கி விடுவதற்குரிய நிர்வாக நடவடிக்கைகளை காலதாமதமின்றி மேற்கொண்டு கொவிட்-19 நோய்தொற்று தடுப்பு செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக அவ்வறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொற்று ஏற்படக்கூடிய சூழல் தொடர்ந்தும் அவதானிக்கப்படுமாயின் தங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளையும் இடைநிறுத்தி வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பிரதேச சபைகள் சட்டத்தின் ஊடாக முன்னெடுக்குமாறு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பிரதேச சபையினால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.