கழிவகற்றல் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் சேவையை மதிக்க வேண்டுமென யாழ்.மாநகர் சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம்- குருநகரிலுள்ள வெள்ளநீர் வடிகால், பிளாஸ்ரிக் உள்ளிட்ட கழிவுகளால் நிரம்பி காணப்படுவதாக யாழ்.மாநகர் சபை முதல்வருக்கு அப்பகுதி மக்கள் முறைப்பாடு தெரிவித்திருந்தனர்.
குறித்த முறைப்பாட்டுக்கமைய அப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட முதல்வர், யாழ்.மாநகர சபை தூய்மைப்படுத்தும் தொழிலாளிகளுக்கு அறிவித்து வாய்க்காலை துப்பரவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.
இதேவேளை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள வெள்ளநீர் வாய்க்கால்கள் துப்பரவு செய்யப்படுகின்றபோதும் கூட சிலர் பொறுப்பற்ற விதத்தில் தொடர்ந்து, கழிவுகளை கொட்டி வருகின்றனர் என யாழ்.மாநகர் சபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த செயற்பாடு மிகவும் கவலையளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யாழ்.மாநகர தூய்மைப்படுத்தும் தொழிலாளிகள், போதிய இயந்திர வலுக்கள் அற்ற நிலையில் மனித வலு ஊடாகவே துப்பரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் யாழ்.மாநகர் சபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே மக்கள் அனைவரும், அவர்களின் அர்ப்பணிப்பான தொழிலை மதித்தாவது துப்பரவு செய்த வாய்க்காலுக்குள் கழிவுகளை கொட்ட வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.