கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின்னரும், நோய் அறிகுறிகள் காட்டிய 22 பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனோபோர்ம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது காணப்படும் எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என உத்தரவாதம் வழங்க முடியாது என, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கூறியுள்ளார்.
மேலும், இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்ற ஒருவருக்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் வரை நோய் எதிர்ப்பு சக்தி காணப்படும் என கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், குறித்த நோய் எதிர்ப்பு சக்தி ஒரு வருடத்துக்கு மேல் நீடிக்குமா இல்லையா என்பது குறித்து விஞ்ஞான ரீதியான பதிலொன்று இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே, கொரோனா தடுப்பூசியை வருடத்துக்கு ஒரு தடவை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு தடவை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமா என்பது குறித்து உறுதியாக தெரிவிக்க முடியாது எனவும், பேராசிரியர் அர்ஜுன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.