தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கவே கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முட்டுக்கட்டையாக உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தவராசா கலையரசன் மேலும் கூறியுள்ளதாவது, “கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் விடயத்தில் பல அர்ப்பணிப்புகளை மேற்கொண்டுவரும் வேளையில், முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்.
இவ்வாறு இருக்கையில் தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களின் பின்புலங்கள் பலமாக இருப்பதன் ஊடாகவே இத்தகைய காரியங்களை அவர்களினால் செய்ய முடிகின்றது.
எமது மக்களின் நிலங்களை மாத்திரமல்ல அவர்களின் தொழிலிடங்களை அழிக்கும் செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை.
கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விடயத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகள் ஏன் முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள் என்பது இது வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
மேலும் தமிழர் பகுதிகளிலுள்ள காணிகளை அபகரிப்பதற்காகவே கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களில் முஸ்லிம் அரசியல் வாதிகள் தடையாக உள்ளார்களா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.