எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட கடல் பேரழிவு தொடர்பான முதல் இடைக்கால இழப்பீட்டு கோரிக்கையானது, மே 23 முதல் ஜூன் 3 வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட செலவுகளை உள்ளடக்கியது என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இழப்பீடு பெறுவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடனான சந்திப்பைத் தொடர்ந்து நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய போதே நீதி அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.
தீயைக் கட்டுப்படுத்த இலங்கை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட செலவு அடங்கலாக 40 மில்லியன் அமெரிக்க டொலர் இடைக்கால உரிமைகோரலைக் கொடுத்துள்ளளாதாக அமைச்சர் கூறினார்.
இதேவேளை கப்பல் நிறுவனத்திடமிருந்து முக்கிய உரிமைகோரலைப் பெறுவதற்கான வழிகளை ஆராய 05 தனித்தனி குழுக்களை நியமித்துள்ளதாகவும் இந்த பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த குழுவை அணுகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தின் விளைவாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து வெளியில் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு தெரிவிக்க துறைமுக மற்றும் கப்பல் அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து சர்வதேச உதவியும் கோரப்பட்டுள்ளது என்றும் அதற்கமைவாக மூன்று நிபுணர்கள் ஜூலை 15 க்குள் நாட்டிற்கு வருவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.