மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் செயற்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டார்.
மேலும் மாவட்ட வைத்தியசாலைகளை புனரமைக்க வேண்டும் என்ற நோக்கம் இதில் தென்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் நெதர்லாந்து அரசாங்கத்தினால் வடக்கு மாகாணத்துக்கு என வழங்கப்பட்ட நிதியுதவியில் மன்னார் மாவட்டம் உள்வாங்கப்படவில்லை.
அதன்போது அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்ன கூறியிருந்தார், அரசாங்கத்தின் நிதி ஊடாக 1517 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு வைத்தியசாலைக்கு புதிதாக வெளிநோயாளர் பிரிவு கட்டடமொன்றிளை கட்டித் தருவதாக கூறியிருந்தார்.
இதேவேளை வெளிநாட்டு நிதி, குறிப்பாக இந்திய அரசாங்கத்தின் நிதியின் ஊடாக குறித்த வேலைத்திட்டங்கள் நடைபெற இருப்பாதாக சுகாதார அமைச்சர் கூறியிருந்தார்
ஆகவே அந்த செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு கூடிய கவனம் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
இதேவேளை நாடளாவிய ரீதியிலுள்ள மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவது தொடர்பாக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவனியா, மன்னார் ஆகியவற்றுக்குரிய வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கு அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளை புனரமைக்க மாகாணத்தின் ஊடாகவே இதுவரைக்காலமும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் உங்களது செயற்பாடுகள், உண்மையாகவே வைத்தியசாலைகளை புனரமைக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.
மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்து வைத்தியசாலையை புனரமைப்பதனை வடக்கிலுள்ள மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.